இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் இரத்த சோகையை கட்டுப்படுத்தும் 12 உணவுகள்
சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு குறைவாக உள்ளது என்பதைப் பொறுத்து இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை லேசானது முதல் கடுமையானது வரையானதாக இருக்கலாம். உடலில் போதுமான சிவப்பணுக்கள் இல்லாதபோது, இரத்தம் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் உறுப்புகளுக்கும் போதுமான ஆக்சிஜனை எடுத்துச் செல்வதில்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். இரத்த சோகையின் தீவிரத்தின் அடிப்படையில், மருத்துவர் இரும்புச் சத்து மாத்திரைகளை தாராளமாக பரிந்துரைக்கிறார். அது மட்டுமில்லாமல் இரும்புச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்ளவும் பரிந்துரைக்கிறார். உங்களுக்கு இரத்த சோகை ஏற்பட்டால், உங்கள் நலனுக்காக இரும்புச்சத்து நிறைந்த 12 உணவுகளின் பட்டியலை இங்கே தொகுத்துள்ளோம். இந்த இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கிறோம்.
இரத்த சோகைக்கு இரும்புச்சத்து நிறைந்த 12 உணவுகள்
காய்கறி மற்றும் இறைச்சி உணவுகளில் இரும்பு ஒரு ஊட்டச்சத்தாக உள்ளது. இறைச்சியிலிருந்து வரும் இரும்பு “ஹீம்” என்று குறிப்பிடப்படுகிறது. தாவரங்களிலிருந்து வரும் இரும்புச்சத்த்தின் மூலமானது “நான்-ஹீம்” என குறிப்பிடப்படுகிறது. இறைச்சி உணவின் ஹீமோகுளோபின்களில் உள்ள இரும்பிலிருந்து ஹீம் இரும்பு உருவானதால் இந்த பெயர். நம் உடல் ஹீம் இரும்பையே திறம்பட உறிஞ்சுகிறது. சைவ உணவு உண்பவர்களுக்கும், வீகன் உணவு உண்பவர்களுக்கும், தாவர மூலத்திலிருந்து (நான்-ஹீம்) கிடைக்கக் கூடிய இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அவர்களின் வசதிக்காக முதல் ஐந்து இடங்களில் பட்டியலிட்டுள்ளோம். ஆரஞ்சு சாறு போன்ற வைட்டமின் சி நிறைந்த பானங்களை சேர்த்து எடுத்துக் கொண்டால், உடலின் “நான்-ஹீம்” இரும்பு உறிஞ்சும் திறன் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அடர்ந்த சிவப்பு நிறத்தில் உள்ள எதுவும் இரும்புச்சத்து நிறைந்தவை என்று கருதப்படுகிறது என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும். உதாரணத்திற்கு திராட்சை, பேரிச்சை, மாதுளை, போன்றவைகளை சொல்லலாம். இப்போது பாட்டிலுக்குள் செல்லலாம்.
(1) அடர் பச்சை நிறக் கீரைகள் மற்றும் சிவப்பு நிறக் கீரைகள்
கிட்டத்தட்ட அனைத்து கீரைகளும் இரும்புச் சத்தின் நல்ல மூலமாகும். இலைகள் அடர் நிறத்தில் காணப்பட்டால், அவற்றில் இரும்புச்சத்து அதிகம் இருக்கும். கீரை ஒரு சூப்பர் உணவு என்று சொல்லலாம். அதில் நிறைய இரும்புச்சத்து உள்ளது. இந்தியாவில், பசலை, பாலாக், அமராந்த் இனங்கள் (அரை கீரை மற்றும் சிரி கீரை) போன்ற கீரைகள் இரும்புச்சத்து நிறைந்தவை.
(2) வேக வைத்த பீன்ஸ்
ஒரு கப் வேக வைத்த பீன்சில் சுமார் 3.5 மில்லிகிராம் அளவு இரும்புச்சத்து உள்ளது. பச்சை பீன்ஸ் சைவ உணவு உண்பவர்களுக்கும், வீகன் உணவு உண்பவர்களுக்கும் இரும்புச்சத்து கிடைப்பதற்கான எளிதான மூலமாகும்.
(3) மாதுளை
இரத்த சோகை பற்றி பேசும்போது எந்த இந்திய பெற்றோரின் மனதிலும் தோன்றும் முதல் பழங்களில் மாதுளை ஒன்றாகும். இந்த பழத்தின் உள்ளே உள்ள முத்து போன்ற விதைகளின் இரத்த சிவப்பு நிறம் இரும்புச்சத்து மிகவும் நிறைந்ததுள்ளதை குறிக்கிறது.
(4) பேரிச்சையும், உலர் திராட்சையும்
இரத்த சோகைக்கு தீர்வு காணும்போது பேரிச்சையும், உலர் திராட்சையும் உடனே கண்முன் வந்து போகும். பெண்களுக்கு பேரிச்சையும், உலர் திராட்சையும் வழங்குவது ஒரு வகையான பாரம்பரியமாகும். பழங்கள் மற்றும் பாதம், முந்திரி போன்ற கொட்டைகள் ஆகியவற்றுடன் சேர்ந்து, அவை சீர் வரிசையில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளன. அவை இரும்புச்சத்துக்கான நல்ல மூலமாக இருப்பதில் ஆச்சரியமில்லை.
(5) பூசணி விதைகள்
பச்சை பூசணி விதைகள் ஊட்டச்சத்து அடர்த்தியான ஒரு உணவு ஆகும். சுமார் 30 கிராம் பூசணி விதைகள் நம் உடலுக்கு 2.1 மில்லிகிராம் இரும்புச்சத்தை கொடுக்க வல்லது.
(6) அடர் நிறக் காய்கறிகள்
பீட்ரூட், பச்சை அல்லது சிவப்பு குடை மிளகாய், கேரட் போன்ற காய்கறிகளும் சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். ஆகவே, இந்த காய்கறிகளை உணவில் போதுமான அளவு சேர்ப்பதன் மூலம் நல்ல அளவு இரும்புச்சத்து கிடைக்கும்.
(7) இரத்தம் மற்றும் மஜ்ஜை
சில வீடுகளில் இரத்த பொரியல் உணவாக தயாரிக்கப் படுகிறது. அவை உறைந்த நிலையில் தடிமனாக இருக்கின்றன. மேலும் அவை ஹீம் இரும்புச்சத்தின் சிறந்த மூலமாகும். எலும்பு சூப் போன்றவற்றில் இருக்கும் மஜ்ஜையும் இரும்புச்சத்தின் சிறந்த மூலமாகும்.
(8) கல்லீரல்
ஆடு மற்றும் கோழியின் கல்லீரலில் நல்ல அளவில் இரும்புச்சத்து உள்ளது. ஒவ்வொரு 100 கிராம் கல்லீரலுக்கும் 3.5 மில்லிகிராம் இரும்புச்சத்து உள்ளது.
(9) மத்தி மீன்
மத்தி, சாலமீன், காரப்பொடி, சூடை, நெத்திலி உள்ளிட்ட மத்தி மீன் குடும்ப மீன்களில் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகின்றன. ஒமேகா -3 கொழுப்பு அமிலம் மற்றும் தேவையான புரதத்தைக் கொண்டிருப்பதைத் தவிர, அவை இரும்புச்சத்து அடங்கிய பல தாதுக்களால் நிறைந்துள்ளன.
(10) முட்டை
முட்டை என்பது புரதமும், நல்ல கொழுப்பும் நிறைந்த உணவு என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் அவற்றுடன் ஒரு நல்ல அளவு இரும்பையும் அது கொண்டுள்ள ஒரு உணவாகவும் அது திகழ்கிறது. முட்டையை முழு கோதுமை ரொட்டியுடன் டோஸ்ட் செய்தோ, வெள்ளரி, மிளகு, தக்காளி போன்ற அடர் நிற காய்கறிகளுடன் சாண்ட்விச் செய்தோ உண்ணலாம். இந்த காய்கறிகளும் இரும்புச்சத்து நிறைந்தவை என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
(11) கோழிக்கறி
கோழிக்கறியில் நல்ல அளவு இரும்பு உள்ளது. 100 கிராம் கோழிக்கறியை காலிஃபிளவர், வதக்கிய கீரை மற்றும் தக்காளியுடன் சமைத்துப் பரிமாறினால் உடலுக்கு போதுமான இரும்புச் சத்து நன்றாக கிடைக்கும்.
(12) சிவப்பு இறைச்சி
மட்டன் (ஆடு), மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சி போன்ற எந்த சிவப்பு இறைச்சியும் புரதம் மற்றும் கொழுப்பைத் தவிர, இரும்புச்சத்துக்கான நல்ல ஒரு மூலமாகும்.
பொறுப்புத் துறப்பு
இரத்த சோகைக்கான மூல காரணம் முதலில் உங்கள் மருத்துவரால் ஆய்வு செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. ஒரு நபர் இரத்த சோகைக்கு ஆளாகும்போது, எந்த அளவிலான உணவும், இரும்புச்சத்து நிறைந்த உணவாக அறியப்பட்டாலும் அவை இரத்த சோகை நிலையை குணப்படுத்த போதுமானதாக இருக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே இரத்த சோகையிலிருந்து விரைவாக குணமடைய உங்கள் மருத்துவர் பரிந்துரைத்தபடி நீங்கள் இரும்புச் சத்து மாத்திரைகளை தவறாமல் எடுக்க வேண்டும். உங்கள் இரத்த சோகை உங்கள் மருத்துவரால் கடுமையான நிலையில் உள்ளது எனக் கூறப்பட்டால், உங்கள் இரும்புச் சத்து உங்கள் இரத்தத்தில் இயல்பு நிலைக்கு வர எடுக்கும் வரை நீங்கள் மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை நீங்கள் மறவாதீர்கள். எனவே இங்கு பரிந்துரைக்கப்பட்ட இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் உங்கள் உணவில் கட்டாயமாக சேர்க்கப்பட வேண்டும் என்பதையும், இதனால் உங்கள் உடல் வழக்கமான இரும்புச்சத்து பெற பழக்கமாகிறது என்பதையும் புரிந்துக் கொள்ள வேண்டும்.