உங்கள் உடல் பருமனாக மாறுவதற்கான 8 முக்கிய காரணங்கள்
எடை அதிகரிப்புக்கும், உடல் பருமனுக்கும் காரணம் உடல் எடையை குறைக்கும் முயற்சியும், சக்தியும் பருமனானவர்களுக்கு இல்லாததால் தான் என்று நம்மில் பலரும் நினைக்கிறோம். ஆனால் உண்மை இதற்கு நேர்மாறானது மட்டுமில்லை, அதை புரிந்துகொள்ளவும் மிகவும் சிக்கலானது. சிலர் தங்கள் உணவுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள், அதற்கும் அவர்களது விடாமுயற்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒருவர் உடல் பருமனாக மாறுவதற்கு 8 முக்கிய காரணங்கள் இதோ.
பரம்பரை அல்லது மரபியல் காரணங்கள்
மெலிந்த பெற்றோரின் குழந்தைகளை விட, உடல் பருமன் உள்ள பெற்றோரின் குழந்தைகள் பருமனாகவோ அல்லது அதிக எடையுடன் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த காரணி பொதுவாகவே உண்மையாக இருந்தாலும், நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்று சொல்லலாம். ஒருவரது பொருளாதார மேம்பாட்டினால் ஏற்படும் புதிய உணவுப் பழக்கவழக்கம் உடல் பருமனின் அதிவேக வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணியாகும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மரபணுக்கள் மாறவில்லை – மாறாக சுற்றுச்சூழலும், அது அவரின் மரபணுக்களுக்கு அனுப்பிய சமிக்ஞைகள் மாறியது என்று தான் சொல்லவேண்டும். இந்த பின்னணியில், நேர்மறையான வாழ்க்கை முறை மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், மரபணு கூறுகள் உடல் எடை அதிகரிப்பதற்கு சாதகமான பங்களிப்பையே செயகின்றன.
குப்பை உணவுகளை உண்பது
பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகம் உண்பதும் ஒரு முக்கிய காரணம் ஆகும். அவை பெரும்பாலும் நார்ச்சத்து இல்லாத சுத்தமான மாவுச்சத்தால் ஆனவை. அவை கலோரிகள் நிறைந்தவை என்றாலும் உடலுக்கு மதிப்புமிக்க ஊட்டச்சத்துக்கள் எதையும் அவை வழங்காது. அவை பொதுவாக நல்ல சுவை கொண்டு இருப்பதால், அவற்றை சாப்பிடாமல் தவிர்ப்பது கடினம். இது இந்த வகை உணவை அதிகப்படியாக சாப்பிடுவதை ஊக்குவிக்கிறது. இதன் விளைவாக உடல் எடை அதிகரிப்பையும், உடல் பருமனுக்கும் வழிவகுக்கிறது.
சர்க்கரை கொண்ட உணவுக்கு அடிமையாதல்
ஜங்க் உணவுகள் நம்மை அடிமையாக்கும். அது ஒரு வித போதை தான். ஏனென்றால், பல நொறுக்குத் தீனிகளில் சர்க்கரை உள்ளது. சர்க்கரை பெரும்பாலும் மது, கோகோயின் அல்லது நிகோடின் போன்ற போதை வஸ்துக்களுடனே ஒப்பிடப்படுகிறது. ஏனென்றால் அது மீண்டும் மீண்டும் நம்மை அதிகம் சாப்பிடும்படிக்கு தூண்டும். உண்ணும் பழக்கத்தின் மீதான கட்டுப்பாட்டை இழக்கும் மக்கள் பெரும்பாலும் இந்த குப்பை உணவுக்கு அடிமையாகிவிடுவார்கள். உண்மையில் சொல்லவேண்டும் என்றால், இந்த அடிமைத்தனத்தை சமாளிப்பது கடினம்.
இன்சுலின்
இன்சுலின் ஒரு முக்கியமான ஹார்மோன் ஆகும். இது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்தும். இந்த செயல்பாடுடன், உடலுக்கு தேவையான ஆற்றல் / சக்தி சேமிப்பையும் ஒழுங்குபடுத்துகிறது. இந்த ஹார்மோன் கொழுப்பு செல்கள் கொழுப்பைச் சேமித்து வைப்பதற்கும், ஏற்கனவே உள்ள கொழுப்பை நீடித்து பிடித்து வைத்துக் கொள்வதற்கும் போதிய சமிக்ஞையை அளிக்கிறது. சுத்திகரிக்கப்பட்ட மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுகள் அதிக உடல் எடை உள்ள நபர்களின் இன்சுலின் எதிர்ப்பு நிலையை ஊக்குவித்து கூட்டுகிறது. இது உடலில் இன்சுலின் அளவைக் குறைக்கிறது. இதனால் கொழுப்பு செல்களில் கொழுப்பு சேமிக்கப்பட்டு உடல் பருமனை அதிகரிக்கச் செய்கிறது. எனவே, இன்சுலின் அளவைக் குறைப்பதற்கான தெளிவான வழி, சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த குப்பை உணவுகளை குறைத்து, அதற்கு பதிலாக அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதேயாகும். இது உடல் எடை இழப்பை ஊக்குவிக்கும் குறைந்த கலோரி உட்கொள்ளலை உறுதி செய்கிறது.
சில மருந்துகள்
சில மருந்துகளின் பக்கவிளைவாக உடல் எடை கூடும். அவற்றில் பொதுவானவை நீரிழிவு மருந்துகள் மற்றும் மனச்சோர்வு மருந்துகள் ஆகும். அவை உடல் மற்றும் மூளையின் செயல்பாட்டை மாற்றுகின்றன, வளர்சிதை மாற்ற விகிதத்தைக் குறைக்கின்றன, பசியை அதிகரிக்கின்றன. மேலும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மிதமான எடை அதிகரிப்பை ஏற்படுத்துகின்றன.
லெப்டின் எதிர்ப்பு (Leptin-resistance)
கொழுப்பு செல்கள் உற்பத்தி செய்யும் லெப்டின், உடல் பருமனில் முக்கிய பங்கு வகிக்கும் மற்றொரு ஹார்மோன் ஆகும். இரத்தத்தில் இந்த ஹார்மோனின் அளவு அதிக கொழுப்பை வைத்து மேலும் அதிகரிக்கிறது. எனவே உடல் பருமன் உள்ளவர்களுக்கு லெப்டின் அளவு அதிகமாக இருக்கும். சாதாரண எடை கொண்டவர்களில், லெப்டின் அளவு அதிகமாக இருந்தால் பசியின்மை ஏற்படுகிறது. ஆனால் இதுவே பருமனான நபர்களில் நடப்பதில்லை. லெப்டின் சரியாக வேலை செய்யாத இந்த நிலை லெப்டின்-எதிர்ப்பு என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய நிலைமைகளில், உண்ட-நிலை குறித்த எந்த சமிக்ஞையும் மூளைக்கு எட்டப்படுவது இல்லை. எனவே தான் அவர்கள் மேலும் மேலும் அதிகமாக சாப்பிட்டு பருமனாக மாறுகிறார்கள். இது ஒரு தீய சுழற்சி ஆகும்.
உணவு ஏராளமாக கிடைத்தல்
மனிதகுல வரலாற்றில் உணவு கிடைப்பது இவ்வளவு அதிகமாக எப்போதும் இருந்ததில்லை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக கிடைக்கும் இந்த உணவுகளில் பெரும்பாலானவை குப்பைகள் ஆகும். குறிப்பாக மேற்கத்திய துரித உணவுகள் பல நாடுகளில் வேரூன்றி இந்த குப்பை உணவின் கிடைத்தலை அதிகரித்துள்ளது. குப்பை உணவுகள் கவர்ச்சிகரமானவை. அதோடு மட்டுமில்லாமல் அவை ஆரோக்கியமான, முழு உணவுகளை விட பெரும்பாலும் விலை மலிவானவை. ஏழை மக்கள் தேவையான அளவு பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை வாங்க முடிவதில்லை. தனிநபர்களின் இடுப்பளவை அதிகரிப்பதில் இந்த காரணி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு இல்லாமை
பெரும்பாலான மக்களுக்கு ஊட்டச்சத்து பற்றிய அடிப்படை அறிவு கூட இல்லை என்பதே உண்மை. பசியைப் போக்கக்கூடிய எதையும் உணவு என்று நினைக்கிறார்கள். உதாரணமாக, தென்னிந்திய உணவுகளில் இன்று அரிசி வடிவில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. சில தசாப்தங்களுக்கு முன்பு, தினைகள் மற்றும் நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பிற சிறுதானியங்கள் சமமாக உட்கொள்ளப்பட்டன. அதே நேரத்தில், மக்கள் கடின உழைப்பையும் செய்து வந்தார்கள். எனவே உடல் பருமன் நம் சமூகத்தில் கிட்டத்தட்ட இல்லை என்ற நிலை இருந்தது. ஆனால் இப்போதோ அப்படி இல்லை. உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து பற்றிய தவறான தகவல்களை வழங்கும் பல வலைத்தளங்களாலும், தவறாக சுற்றும் வாட்ஸ்அப் செய்திகளாலும் தகவலறிந்தவர்கள் கூட ஏமாறுகிறார்கள்.
உடல் எடையை குறைப்பது என்பது சரிவிகித உணவை உட்கொள்வதும், மிதமான அல்லது தீவிரமான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது மட்டுமேயல்ல. மேற்கூறிய அனைத்து காரணிகளையும் நன்கு அறிந்து விவேகத்துடன் செயல்படுவதிலும் தான் இருக்கிறது.