18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

நாட்பட்ட கணைய அழற்சியால் ஏற்படும் 7 முக்கிய சிக்கல்கள்

நாட்பட்ட கணைய அழற்சி என்பது கணையத்தில் தொடர்ந்து ஏற்படும் அழற்சியாகும். இது காலப்போக்கில் மீள முடியாத பாதிப்பை ஏற்படுத்துகிறது. கடுமையான கணைய அழற்சியைப் போலல்லாமல், நாட்பட்ட கணைய அழற்சி கணையத்தின் செயல்பாட்டுத் திறனை படிப்படியாகக் குறைத்து, பல ஆபத்தான பக்கவிளைவுகளுக்கு வழிவகுக்கும். கடுமையான கணைய அழற்சி பொதுவாக சரியான சிகிச்சையுடன் குணமடையும் என்றாலும், நாட்பட்ட கணைய அழற்சியை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால் அதை திறம்பட நிர்வகிக்க முடியும். நாட்பட்ட கணைய அழற்சியுடன் வரும் பிரச்சனைகளை சரியாகப் புரிந்துகொள்வது அவசியம் ஆகும். ஏனென்றால் உடனடி சிகிச்சையும், நோய் நிர்வாகமும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, நோய்நிலை மேலும் மோசமடைவதைத் தடுக்கும்.

நீரிழிவு நோய் (Diabetes Mellitus)

நீரிழிவு நோய் என்பது நாட்பட்ட கணைய அழற்சியின் பொதுவான விளைவுகளில் ஒன்றாகும். நீரிழிவு நோய் என்பது ஒரு பொதுவான நோயாக இருப்பதால், நாட்பட்ட கணைய அழற்சி அவர்கள் எல்லோருக்கும் இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை தெளிவாக இங்கே சொல்லியாக வேண்டும். கணையம் போதுமான இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாதபோது, இரத்த சர்க்கரை அளவு உயர்கிறது. இது இதய நோய், சிறுநீரக பாதிப்பு, நரம்பு பிரச்சனைகள் ஆகியவற்றின் அபாயத்தை உயர்த்துவதோடு, மேற்படி நோயாளிகள் இன்சுலினைச் சார்ந்து வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம்.

வெளிப்புற கணைய பற்றாக்குறை (Exocrine Pancreatic Insufficiency – EPI)

உணவு செரிமானத்திற்கு உதவும் நொதிகளை வெளியிடுவதில் கணையம் முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்பட்ட கணைய அழற்சி உள்ளவர்களுக்கு இந்த செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் திடீர் உடல் எடை இழப்பு, உப்புசம், வயிற்றுப்போக்கு, ஊட்டச்சத்து சரியாக உறிஞ்சப்படாமால் போதல் போன்ற நோய்நிலைகள் ஏற்படுகின்றன. எனவே, நோயாளிகளுக்கு செரிமான சமநிலையை மீட்டெடுக்க கணைய நொதி மருந்துகள் தேவைப்படுகின்றன.

ஊட்டச்சத்து குறைபாடு (Malnutrition)

கணையத்தின் நிலை காரணமாக ஊட்டச்சத்து உறிஞ்சப்படாமல் இருக்கும்போது, நோயாளிகளுக்கு வைட்டமின் மற்றும் மினரல்கள் குறைபாடு ஏற்படலாம். குறிப்பாக A, D, E, K போன்ற கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்கள் குறைபாடு ஏற்படுவது நிகழலாம். இந்தக் குறைபாடு கவனிக்கப்படாவிட்டால், நோயெதிர்ப்பு மண்டல பலவீனம், இரத்தப்போக்கு பிரச்சனைகள், எலும்பு பலவீனம் போன்ற சிக்கல்கள் ஏற்படலாம்.

கணைய சூடோசிஸ்டுகள் (Pancreatic Pseudocysts)

சூடோசிஸ்டுகள் என்பவை கணையத்தில் அல்லது அதைச் சுற்றி உருவாகும் திரவம் நிரப்பப்பட்ட ஒரு வித பைகளாகும். இது நாட்பட்ட கணைய அழற்சியின் காரணமாக ஏற்படும் பக்கவிளைவு ஆகும். இந்த சூடோசிஸ்டுகள் வலி, வாந்தி, தொற்றுகள் போன்ற கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஆனால் சில சமயங்களில் அறிகுறிகள் இல்லாமலும் இவை இருக்கலாம். சூடோசிஸ்டுகள் பெரிதாக வளர்ந்தாலோ, தொற்றுக்கு உள்ளானாலோ, மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. இதற்கு எண்டோஸ்கோபிக் அல்லது அறுவை சிகிச்சை மூலம் சூடோசிஸ்டுகளை வடிகட்டவோ, அகற்றவோ வேண்டியிருக்கும். இதனால் மேலும் சிக்கல்கள் தவிர்க்கப்படலாம். 

நாட்பட்ட வயிற்று வலி (Chronic Abdominal Pain)

தொடர்ச்சியான வயிற்று வலி என்பது நாட்பட்ட கணைய அழற்சியின் மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும். இது மோசமாகும்போது, நோயாளியின் மனநிலையை பாதிக்கிறது. ஏனென்றால் இது அவர்களின் அன்றாட நடவடிக்கைகளை மட்டுப்படுத்துகிறது. வலி நிர்வாகத்திற்கு வாழ்க்கை முறை மாற்றங்களும், அதற்குரிய மருந்துகளும் எடுக்க வேண்டி இருக்கும்.

கணைய புற்றுநோயின் அதிகரித்த அபாயம் (Increased Risk of Pancreatic Cancer)

இருப்பதிலேயே மிகப்பெரிய அபாயம் கணைய புற்றுநோயாகும். கணையத்தில் தொடர்ச்சியான அழற்சி இந்த கணைய புற்றுநோய் அபாயத்தை பெருமளவு அதிகரிக்கிறது. எனவே, நீண்டகால நாட்பட்ட கணைய அழற்சி உள்ள நோயாளிகளுக்கு வழக்கமான கண்காணிப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைகள் வலியுறுத்தப்படுகிறது.

பித்த நாள அல்லது குடல் அடைப்பு (Bile Duct or Intestinal Obstruction)

சில சந்தர்ப்பங்களில், கணையத்தின் அழற்சியும், வடு திசுக்களும் அருகிலுள்ள உறுப்புகளை அழுத்தலாம். இது பின்வருவனவற்றை ஏற்படுத்தலாம்:

– பித்த நாள அடைப்பு காரணமாக மஞ்சள் காமாலை (தோல் மற்றும் கண்கள் மஞ்சளாகுதல்).

– குடல் அடைப்பு காரணமாக வாந்தி அல்லது வயிற்று வீக்கம்.

நாட்பட்ட கணைய அழற்சி என்பது வெறும் அழற்சி மட்டுமல்ல. இது ஒரு நபரின் வாழ்க்கையை மாற்றக்கூடிய பல கடுமையான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் ஒரு பிரச்சனை ஆகும். உடல் எடை கூடவே கூடாது என்பது தான் இங்கே முக்கியமாக நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய ஒன்றாகும். கொழுப்பு செரிமானம் முழுமையாக நடக்க முடியாமல் போகும் இந்த நிலை நிலையால் தான் ஒல்லியான உடல்வாகுடன் நோயாளிகள் எப்போதும் இருக்கிறன்றனர். சரியான மருத்துவ பராமரிப்பு, நொதி மாற்று சிகிச்சை, உணவு மாற்றங்கள், கவனமான கண்காணிப்பு, ஆகியவற்றின் மூலம் நோயாளிகள் இன்னும் நிறைவான வாழ்க்கையை வாழ முடியும். நாட்பட்ட கணைய அழற்சியால் ஏற்படும் நீண்டகால பாதிப்புகளைக் குறைப்பதற்கு உடனடி சிகிச்சையும், ஆரம்பகால பிரச்சனைகளைக் கண்டறிதலும் தேவை.

Call Now