கொலனோஸ்கோப்பி பற்றிய பயனுள்ள தகவல்கள்
பெருங்குடல் புற்றுநோய், பாலிப்கள், அழற்சி மற்றும் பிற செரிமான மண்டல கோளாறுகளைக் கண்டறிவதற்கான மிகவும் திறமையான முறைகளில் கொலனோஸ்கோப்பி பரிசோதனையும் ஒன்றாகும். கொலனோஸ்கோப்பி செய்துகொள்வதற்கு பலர் அஞ்சுகிறார்கள். ஆனால், இந்த பரிசோதனை செயல்முறை குறித்து நன்கு அறிந்துகொள்வது பதட்டத்தைக் குறைத்து, இந்த பரிசோதனை அளிக்கும் நன்மைகளை புரிந்துக்கொள்ள மிகவும் உதவும். உயிர்காக்கும் இந்த செயல்முறைக்கு நோயறிதல் மற்றும் தடுப்பு என இரண்டு மதிப்புகளும் உள்ளன. மேலும் இது ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றும் ஒரு அற்புதமான பரிசோதனை முறையும் ஆகும்.
பெருங்குடல் பரிசோதனை ஏன் முக்கியமானது?
பெருங்குடலும், மலக்குடலும் காலப்போக்கில் மாற்றங்களுக்கு உள்ளாகலாம். இந்த மாற்றங்கள் எல்லா நேரங்களிலும் அறிகுறிகளாக வெளிப்படுவதில்லை. உதாரணமாக, புற்றுநோய்க்கு முந்தைய பாலிப்கள் பெரும்பாலும் பெருங்குடலில் எந்த அறிகுறியும் இல்லாமல் வளர்கின்றன. அறிகுறிகள் தோன்றும் நேரத்திற்குள், அவை வளர்ந்து கணிசமான அளவு பெரியதாக மாறியிருக்கலாம். புற்றுநோய் வளர்ச்சியைத் தடுப்பதற்காக, கொலனோஸ்கோப்பி பரிசோதனை மருத்துவர்களுக்கு முழு பெருங்குடலையும் நேரடியாகப் பார்க்க உதவுகிறது. சில சமயங்களில் பரிசோதனை செய்யப்படும் அதே நேரத்தில், பெருங்குடலில் உள்ள ஏதேனும் அசாதாரணங்களை அகற்றவும் இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
கொலனோஸ்கோப்பி பரிசோதனை எப்போதெல்லாம் பரிந்துரைக்கப்படுகிறது?
பின்வரும் சூழ்நிலைகளில் கொலனோஸ்கோப்பி பரிசோதனை பரிந்துரைக்கப்படுகிறது:
- 45 வயதுக்குப் பிறகு நோயாளிகள் வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது
- நோயாளியின் குடும்பத்தில் பெருங்குடல் புற்றுநோய் வரலாறு இருந்தால் முன்கூட்டியே பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்படுகிறது
- நீண்டகால வயிற்றுப்போக்கு, இரத்தப்போக்கு அல்லது விளக்க முடியாத வயிற்று வலி போன்ற அறிகுறிகள் தோன்றும்போது.
ஆபத்து காரணிகள் அதிகம் உள்ள சில நபர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அடிக்கடி பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படலாம். அந்த முடிவானது அத்தகைய நோயாளிகளின் மருத்துவ வரலாற்றின் அடிப்படையில் எடுக்கப்படுகிறது.
கொலனோஸ்கோப்பி பரிசோதனைக்குத் தயாராகுதல்
கொலனோஸ்கோப்பி பரிசோதனைக்கு முன்னரான தயார்நிலை துல்லியமான பரிசோதனைக்கு முக்கியமானதாகும். செரிமான மண்டலத்தில் செரிக்கப்பட்ட உணவு, மலம் என்று எதுவும் இல்லாமல் இருப்பது நல்லது. ஆகையால் குடல் முற்றிலும் காலியாக இருக்க வேண்டும். வயிற்றுப்பகுதி காலியாக இருக்கும்போது சிறிய அசாதாரணங்களையும் கண்டறிய முடியும் என்பதால் இது பரிந்துரைக்கப்படுகிறது.
தயார்நிலைக்கு தேவையான பட்டியல் இதோ:
- ஒரு நாளுக்கு முன்பு (கொலனோஸ்கோப்பி பரிசோதனைக்கு முந்தைய நாள்) குறைந்த நார்ச்சத்து உணவு அல்லது திரவ உணவு
- மருந்து அல்லது குடலைச் சுத்தம் செய்யும் மருந்துகள்
- ஏதேனும் மருந்துகளை உட்கொண்டு வந்தால், அவற்றில் மருத்துவரின் ஆலோசனைக்கு உட்பட்டு தற்காலிக மாற்றங்கள் செய்தல்
வழிகாட்டுதல்கள் கவனமாகப் பின்பற்றப்படும்போது, அது கொலனோஸ்கோப்பி அறிக்கையின் துல்லியத்தை அதிகரிக்கிறது. மேலும், கொலனோஸ்கோப்பி பரிசோதனை செய்யும்போது சில விஷயங்கள் தெளிவாகக் கவனிக்கப்படாத பட்சத்தில், அந்த செயல்முறையை மீண்டும் செய்ய வேண்டிய தேவையையும் இது குறைக்கிறது.
கொலனோஸ்கோப்பி பரிசோதனையின் போது
கொலனோஸ்கோப்பி பரிசோதனையின் போது நோயாளிகளுக்கு மயக்க நிலை மருந்து கொடுக்கப்படுகிறது. இது பரிசோதனையின் போது அவர்களுக்கு பதட்டம் இல்லாத நிலையை ஏற்படுத்த்துகிறது. கேமரா பொருத்தப்பட்ட ஒரு நெகிழ்வான குழாய் மெதுவாகவும் படிப்படியாகவும் பெருங்குடலுக்குள் செலுத்தப்பட்டு, அதன் உள்சுவற்றுப் படலம் கவனமாகப் பரிசோதிக்கப்படுகிறது. பெருங்குடலின் உள்சுவற்றுப் படலத்தில் பாலிப்கள் கண்டறியப்பட்டால், அவை உடனடியாக அங்கேயே அகற்றப்படுகின்றன. எடுக்கப்பட்ட அந்த பாலிப் திசு மாதிரிகள் பயாப்ஸி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
கொலனோஸ்கோப்பி பரிசோதனைக்குப் பிறகு
கொலனோஸ்கோப்பி பரிசோதனை என்பது ஒரு பகல்நேர சிகிச்சை முறை என்பதால், நோயாளிகள் அதே நாளில் வீட்டிற்குத் திரும்பி, அன்றே தங்கள் வழக்கமான வேலைகளைத் தொடரலாம். பரிசோதனையின் போது உள்ளே செலுத்தப்படும் காற்றினால், லேசான வாயுத்தொல்லை அல்லது வயிறு உப்புசம் ஏற்படலாம். இது முற்றிலும் இயல்பானது தான். பயாப்ஸி அல்லது பாலிப் அகற்றும் செயல்முறைக்குப் பிறகு சில நாட்களில் கொலனோஸ்கோப்பி பரிசோதனையின் முடிவுகள் வழங்கப்படுகின்றது.
கொலனோஸ்கோப்பி என்பது ஒரு நோயறிதல் பரிசோதனை மட்டுமல்லாமல், ஒரு தடுப்புப் பரிசோதனை செயல்முறையாகவும் செயல்படுகிறது. பெருங்குடல் புற்றுநோய், பிற இரைப்பை குடல் நோய்கள், கோளாறுகள் மற்றும் அசாதாரணங்களை பெருங்குடலிலேயே முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். இது குறித்து அறிந்துகொண்டு உடனடியாகச் செயல்படுவதே உங்கள் நீண்டகால செரிமான ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழி ஆகும்.