சைவ உணவும் அது ஏற்படுத்தும் ஊட்டச்சத்து குறைபாடும்
சைவ உணவுப் பழக்கம் உள்ளவர்களிடையே ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது ஒரு பொதுவான விஷயம் தான். சைவ உணவுகளில் ஊட்டச்சத்து குறைபாட்டின் சாத்தியம் மிகவும் அதிகமே. இதன் விளைவாக சைவ உணவு உண்பவர்கள் பெரும்பாலும் சரிவிகித உணவைப் பெறுவதில்லை. இந்த உண்மையை மேலும் அலசுவோம்.
ஒரு பொது விதியாக, முட்டைகளை உட்கொள்ளாத தூய சைவ உணவு உண்பவர்களுக்கு வைட்டமின் பி 12, இரும்பு, கால்சியம், அயோடின், துத்தநாகம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் D3 மற்றும் புரதங்கள் குறைவாகவே இருக்கும். எனவே இந்த தாதுக்களை பெற மாற்றுவழி ஒன்றையும், அதிலும் குறிப்பாக வைட்டமின் பி 12 மற்றும் இரும்பு ஆகியவற்றை கண்டிப்பாக பெற வேண்டும்.
வைட்டமின் பி12 குறைபாடு
வைட்டமின் பி12 அசைவ உணவுகளில் மட்டுமே அதிகமாகக் கிடைக்கிறது. எனவே சைவ உணவு உண்பவர்களுக்கு இயல்பாகவே வைட்டமின் பி12 குறைபாடு இருக்கும். பால், பாலாடைக்கட்டி, தயிர், மோர் போன்ற பால் பொருட்களில் வைட்டமின் பி12 மற்றும் கால்சியம் நிறைந்துள்ளது. எனவே சைவ உணவு உண்பவர்கள் வைட்டமின் பி 12 பெற போதுமான பால் பொருட்களை உட்கொள்ள வேண்டும்.
சைவ உணவு உண்பவர்களுக்கு பாலிஷ் செய்யப்பட்ட பச்சரிசி ஏற்படுத்தும் விளைவுகள்
பச்சரிசி பொதுவாக பாலிஷ் செய்யப்படுகிறது. இதன் விளைவாக அரிசியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் வெளியேறுகின்றன. பாலிஷ் செய்யும் போது இழக்கப்படும் வைட்டமின்களில் முக்கியமானது வைட்டமின் பி1 ஆகும். புழுaaங்கல் அரிசியில், அரிசியை உமியுடன் சேர்த்து வேகவைக்கும் செயல்முறை உள்ளது. இது உமியை நீக்குவதற்கு முன்பு அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அரிசிக்குள் ஊடுருவுவதை உறுதி செய்கிறது. தென்னிந்திய சைவ உணவு உண்பவர்கள் பொதுவாக பாலிஷ் செய்யப்பட்ட பச்சரிசியை உண்ணும் பழக்கம் உடையவர்கள். இந்தப் பிரச்சனைக்கான சிறந்த தீர்வாக, புழுங்கல் அரிசியை சாப்பிடுவது அல்லது பால் மற்றும் முட்டையை உணவில் சேர்ப்பது மட்டுமே ஆகும். பால் மற்றும் முட்டைகள் பல ஊட்டச்சத்து குறைபாடுகளை ஈடுசெய்யும் திறன் கொண்டது.
சைவ உணவு உண்பவர்களுக்கு ஏற்படும் புரதச்சத்து குறைபாடு
புரதங்களைப் பொறுத்தவரை, 9 அமினோ அமிலங்கள் நம் உடலுக்கு அவசியம் ஆகும். பொதுவாக சைவ உணவு உண்பவர்களுக்கு இந்த அமினோ அமிலங்கள் குறைவாகவே கிடைக்கின்றன. ஏனெனில் அசைவ மூல உணவுகளில் பல அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. சைவர்களோ அவற்றை உட்கொள்வதில்லை. சைவர்களுக்கு அப்படி குறையுடன் கிடைக்கும் ஒரு அமினோ அமிலத்தின் உதாரணமாக கிரியேட்டினை (Creatine) கூறலாம். இது தசையை வளர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. கிரியேட்டினின் மற்ற பயன்பாடுகளாக நினைவாற்றலை வைத்திருப்பதையும், நரம்பு மண்டல பாதுகாப்பையும் கூறலாம். குறிப்பிட்ட இந்த அமினோ அமிலம் முக்கியமாக அசைவ உணவுகளில் மட்டுமே காணப்படுவதால் பெரும்பாலான சைவ உணவுகளில் கிரியேட்டின் குறைபாடு உள்ளது. அதனால்தான் சைவ உணவு உண்பவர்களுக்கு ஊட்டச்சத்து நிபுணர்களின் உதவியை எடுத்துக்கொள்வது அவசியம் ஆகிறது. ஏனென்றால் அவர்கள் ஒரு சீரான உணவைப் பராமரிக்க அவர்கள் எடுக்க வேண்டிய கூடுதல் உணவுகள் என்னென்ன என்று அவர்களுக்கு வழிகாட்ட முடியும். பால் சார்ந்த பொருட்கள், பருப்பு வகைகள், சோயாபீன்ஸ், பல்வேறு வகையான உண்ணக்கூடிய காளான்கள் ஆகியவை பொதுவாக சைவ உணவு உண்பவர்களுக்கு அவர்களுக்கு கிடைக்காத அமினோ அமிலத்தை ஈடுசெய்ய பரிந்துரைக்கப்படுகின்றன.