18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

உங்கள் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதற்கான 7 வழிகள்

அதிக கொலஸ்ட்ரால் ஒரு அமைதியான கொலையாளி. இது எந்த அறிகுறிகளையும் காட்டாது, ஆனால் அதே நேரத்தில், இரத்த நாளங்களைக் குறுகலாக்கி, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது. நகர்ப்புற இந்தியாவில் உள்ள பெரியவர்களிடம் ஹைப்பர்கொலஸ்ட்ரோலீமியா (அதிக கொலஸ்ட்ரால்) பரவல் 25-30% ஆக உள்ளது. மேலும் தென்னாசிய மரபுவழியை கொண்ட காரணமே சர்வதேச வழிகாட்டுதல்களில் ஒரு ஆபத்து காரணியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், அதிக கொலஸ்ட்ரால் ஒப்பீட்டளவில் எளிதாகக் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு நிலை தான். அதைக் குறைக்க அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஏழு வழிகள் இதோ.

1. கொழுப்பு நிறைந்த உணவுகளை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுங்கள்

நீங்கள் சாப்பிடும் கொழுப்பின் வகை அளவை விட முக்கியமானது ஆகும். மோனோஅன்சாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் LDL கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகின்றன. மறுபுறம், சாச்சுரேட்டட் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் அதை அதிகரிக்கின்றன. வெண்ணெய்க்கு பதிலாக எக்ஸ்ட்ரா வர்ஜின் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துங்கள். பிஸ்கட் சாப்பிடுவதற்குப் பதிலாக, பாதாம் அல்லது கொய்யா சாப்பிடுங்கள். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மத்தி, சாலை, போன்ற எண்ணெய் நிறைந்த மீன்களை சாப்பிடுங்கள். ஆட்டிறைச்சி, கொழுப்பு நிறைந்த பால் பொருட்கள், பொரித்த உணவுகள், போன்றவற்றை கட்டுப்படுத்துங்கள்.

2. கரையக்கூடிய நார்ச்சத்தை உணவில் அதிகரியுங்கள்

கரையக்கூடிய நார்ச்சத்து செரிமான பாதையில் கொலஸ்ட்ராலுடன் இணைந்து அதை உடலில் இருந்து வெளியேற்றுகிறது. நாளுக்கு ஐந்து முதல் பத்து கிராம் சாப்பிடுங்கள். கரையக்கூடிய நார்ச்சத்தின் சிறந்த ஆதாரங்களில் அடங்கும் உணவுகள் ஆளிவிதை என்று சொல்லப்படும் Flaxseeds, முளைகட்டிய பயிர்கள், ஓட்ஸ், பார்லி, பீன்ஸ், பருப்பு, ஆப்பிள், ப்ரஸ்ஸல்ஸ் ஸ்ப்ரவுட்ஸ், போன்றவை ஆகும். உங்கள் காலை சிற்றுண்டியாக ஒரு கிண்ணம் ஓட்சை மாற்றுவதன் மூலம் சில வாரங்களுக்குள் பயனடையலாம்.

3. அரைத்த ஆளிவிதையைச் சேர்க்கவும்

ஆளிவிதையில் கரையக்கூடிய நார்ச்சத்தும், ஒமேகா-3ம் உள்ளன. இது கொலஸ்ட்ராலைக் குறைக்க சிறப்பாக செயலாற்றுகிறது. ஆளிவிதையிலிருந்து அதிக பயனைப் பெற, அரைத்த அல்லது இடித்த (முழு அல்லது எண்ணெய் வடிவத்தில் அல்ல) வாங்குங்கள். ஏனெனில் முழு ஆளிவிதையிலிருந்து ஊட்டச்சத்துக்களை உடல் எளிதில் உறிஞ்ச முடியாது. நாளுக்கு இரண்டு தேக்கரண்டி அரைத்த ஆளிவிதையை தயிர் அல்லது தானியத்தில் கலந்து சாப்பிடுவது ஒரு நல்ல பலனைத் தரும்.

4. உங்கள் உடலுக்கு தொடர்ந்து பயிற்சி கொடுங்கள்

உடற்பயிற்சி HDL கொலஸ்ட்ராலின் அளவை மேம்படுத்துகிறது. இது LDL கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது. வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. இவை மிதமான உடற்பயிற்சிகளாகக் கூட இருக்கலாம். வாரத்தில் ஐந்து நாட்கள், நாளுக்கு குறைந்தது 30 நிமிடங்கள் எடுக்க வேண்டும். வேகமாக நடப்பது, நீச்சல், சைக்கிள் ஓட்டுவது அல்லது நடனம் போன்ற செயல்பாடுகள் இதில் அடங்கும். தொடக்கநிலையாளராக இருந்தால் சிறிய கால அவகாசத்துடன் தொடங்கி பின்னர் நாளுக்கு 30 நிமிடங்களாக அதிகரிக்கலாம்.

5. ஆரோக்கியமான உடல் எடையை பராமரியுங்கள்

அதிக உடல் எடை, குறிப்பாக உள்ளுறுப்பு கொழுப்பு, கொலஸ்ட்ரால் அளவை எதிர்மறையாக பாதிக்கிறது. இந்த விஷயத்தில், உடல் எடையை 5-10% குறைப்பது “கெட்ட” கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவை கட்டுப்படுத்த அல்லது குறைக்க உதவும். நல்ல உணவுமுறை மூலமும், விளையாட்டுகள் விளையாடுவதன் மூலமும் உடல் எடையைக் குறைக்க வேண்டியது அவசியம் ஆகும். கூடுதலாக, இந்த நடைமுறை நீரிழிவு நோய் மற்றும் கொழுப்பு கல்லீரல் உருவாவதைக்கூடத் தடுக்கலாம்.

6. புகைபிடிப்பதை நிறுத்துங்கள்; மதுவைக் கட்டுப்படுத்துங்கள்

புகைபிடிப்பது HDL (நல்ல கொலஸ்ட்ரால்) அளவைக் குறைத்து இரத்த நாளங்களின் சுவர்களை சேதப்படுத்துகிறது. புகைபிடிப்பதை நிறுத்துவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான மிக முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்றாகும். மது ட்ரைகிளிசரைடுகளை அதிகரித்து வெற்று கலோரிகளை வழங்குகிறது; இரண்டு பழக்கங்களை முற்றிலும் கைவிடுவது உடலுக்கு பல வகையில் நல்லது என்பதை மறக்க வேண்டாம்.

7. அளவை அறிந்து கொள்ளுங்கள், தேவைப்பட்டால் உதவியை நாடுங்கள்

அதிக கொலஸ்ட்ரால் அறிகுறிகளைக் காட்டாது. எனவே உடலில் அதன் அளவைத் தீர்மானிக்க இரத்த பரிசோதனை தேவை. 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருடத்திற்கு குறைந்தது ஒரு முறை கொலஸ்ட்ராலை பரிசோதிப்பது பரிந்துரைக்கப்படுகிறது. வாழ்க்கைமுறை மாற்றங்கள் செய்தும் கொழுப்பின் அளவை விரும்பத்தக்க வரம்புக்குக் குறைக்க முடியவில்லை என்றால், ஸ்டாடின்கள் உட்பட கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மருந்துகளைக் எடுக்க வேண்டியிருக்கலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஸ்டாடின்கள் முதல் நிலை சிகிச்சையாக மேற்கொள்ளப்படுகிறது. அதே நேரத்தில் ஸ்டாடின் பயன்பாட்டின் போதும் அளவுகள் மிக அதிகமாக உள்ளவர்கள் அல்லது பாதகமான விளைவுகளால் ஸ்டாடின்களை எடுக்க முடியாதவர்களுக்கு மற்ற மருந்துகள் கிடைக்கின்றன.

கொலஸ்ட்ராலுக்கான பரிசோதனை எளிதானது. ஒவ்வொரு நகரத்திலும் மலிவு விலையில் லிப்பிட் ப்ரொஃபைல் (Lipid Profile) பரிசோதனையை வழங்கும் பல மருத்துவ வசதிகள் உள்ளன. நீரிழிவு நிலை அல்லது குடும்பத்தில் இதய நோய் காரணமாக ஒருவருக்கு அதிக கொலஸ்ட்ரால் வர வாய்ப்பு அதிகமாக இருந்தால், வரம்புக்குள் இருக்கவேண்டிய அளவு குறித்து மருத்துவரை அணுகி தெரிந்துக்கொள்வது எப்போதும் நன்மை கொடுக்கும்.

Call Now