18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

நீரிழிவு நோய் ஏன் கால்களில் காயத்தை ஏற்படுத்துகிறது?

சர்க்கரை நோயாளிகளின் கால்களில் காயம் ஏற்பட்டு அது ஆறாமல் இருப்பதை நாம் அடிக்கடி பார்த்திருப்போம். அவர்களில் சிலருக்கு கால்கள் துண்டிக்கப்படும் துரதிர்ஷ்டமும் நிகழ்வது உண்டு. நீரிழிவு நோய் ஏன் கால்களை காயப்படுத்துகிறது? அதற்கான காரணங்கள் என்னென்ன? நீரிழிவு நியூரோபதி (Diabetic Neuropathy) எனப்படும் ஒரு நிலை குறித்த சில உண்மைகளை இங்கே அலசலாம் வாருங்கள்.

நீரிழிவு நியூரோபதி (Diabetic Neuropathy) என்றால் என்ன?

இது நீரிழிவு நோய் சிக்கலாகி விட்டதன் விளைவாக தூண்டப்பட்ட ஒரு வகை நரம்பு சேதமாகும். சர்க்கரை நோய் உள்ள அனைவருக்கும் இந்த நிலை வராது. ஆனால் 50% நீரிழிவு நோயாளிகளுக்கு, நீரிழிவு நியூரோபதி நிலையை அடையும் அபாயம் இருப்பதாக ஒரு மதிப்பீடு கூறுகிறது. இரத்த குளுக்கோஸின் அதிக அளவு நரம்புகளை காயப்படுத்தலாம். குறிப்பிட்டு சொன்னால், பெரும்பாலும் கால்கள் மற்றும் பாதங்களில் உள்ள நரம்புகளை சேதப்படுத்தும் குணம் இந்த நோய்நிலைக்கு உண்டு.

உடல் உறுப்புகளின் நரம்புகள் பாதிக்கப்பட்டதன் அடிப்படையில் நான்கு வகையான நீரிழிவு நியூரோபதி வகைகள் உள்ளன. அவை

  • பெரிஃபரல் நியூரோபதி (Peripheral Neuropathy)
  • ஆட்டோனாமிக் நியூரோபதி (Autonomic Neuropathy)
  • பிராக்சிமல் நியூரோபதி (Proximal Neuropathy)
  • மோனோநியூரோபதி (Mononeuropathy)

நீரிழிவு நியூரோபதியின் அறிகுறிகள்

  • பாதிக்கப்பட்ட கால்கள், பாதங்கள் மற்றும் கைகளில் வலியும், உணர்வின்மையும், வலி மற்றும் வெப்பநிலை மாற்றங்களின் உணர்வின்மை, ஒரு வித எரியும் உணர்வு, தசை பலவீனம், தீவிர உணர்திறன் ஆகியவை பெரிஃபரல் நியூரோபதி நோய்க்கு பொதுவான சில அறிகுறிகளாகும்.
  • நோயாளிகள் படுத்த நிலையில் இருந்து எழும்பும்போது இரத்த அழுத்தம் குறைவது, தலைச்சுற்றல், இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவது (இரத்தச் சர்க்கரைக் குறைவு), குடல் பிரச்சனை, நன்றாக சாப்பிட்டு முடித்த ஒரு உணர்வு, பசியின்மை, பெண்களுக்கு யோனியில் ஏற்படும் வறட்சி, ஆண்களுக்கு குறியில் விறைப்புத்தன்மை செயலிழப்பு போன்ற பாலியல் தொடர்பான பிரச்சினைகள் போன்றவை ஆட்டோனாமிக் நியூரோபதி நோய் நிலைக்கு பொதுவான சில அறிகுறிகளாகும்.
  • பிட்டப் பகுதி, இடுப்பு அல்லது தொடைகளில் வலி, பலவீனமான தொடை தசைகள், தொடை தசைகள் சுருங்குதல், லேசான மார்பு வலி, (இது உண்மையில் மேல் வயிற்று சுவரில் இருந்து வரும் வலி) – இவை ப்ராக்ஸிமல் நியூரோபதிக்கு பொதுவான சில அறிகுறிகளாகும்.
  • ஒரு குறிப்பிட்ட ஒற்றை நரம்பில் உள்ள சிக்கல்கள் மோனோநியூரோபதியின் தனி குணமாகும். பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட நரம்பின் அடிப்படையில் அறிகுறிகள் தோன்றுகின்றன. கைகள் அல்லது கால்களில் உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு, முகத்தின் ஒரு பக்கம் செயலிழத்தல், கைகளில் பலவீனம் (இது நோயாளிக்கு பொருட்களைக் கீழே போடச் செய்யும் அளவுக்கு பலவீனத்தை உண்டுசெய்யும்), பாதத்தின் கால்விரலை தூக்க இயலாமை ஆகியவை மோனோநியூரோபதி நோய்நிலைக்கு உள்ள பொதுவான சில அறிகுறிகள் ஆகும். 

நோயாளிக்கு மேலே குறிப்பிடப்பட்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று இருந்தாலோ அல்லது மிக முக்கியமாக ஏதேனும் காயம் அல்லது காயம் குணமடையவில்லை என்றாலோ, நீரிழிவு நியூரோபதி நிலைக்கு உடனடியாக மருத்துவரை அணுக வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். பல நோயாளிகள், ஒரு காயம் ஆறாமல் இருந்தால், அது குறித்து மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின்னரே சர்க்கரைநோய்  இருப்பதையே கண்டறிகின்றனர் என்பதை இங்கே குறிப்பிட்டு ஆகவேண்டும்.

நீரிழிவு நியூரோபதி நோய்நிலைக்கான சிகிச்சை

நீரிழிவு நியூரோபதி நோய்க்கு எந்த சிகிச்சையும் இல்லை. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த நோய்நிலையின் முன்னேற்றத்தை மெதுவாக்குவது மட்டுமே நாம் செய்யக்கூடிய ஒரே விஷயம் ஆகும். உடல் பயிற்சிகள் மற்றும் முறையான உணவுகளை எடுப்பது போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழிநடத்துவது மூலம் இதனை செய்யலாம். இரத்த குளுக்கோஸ் அளவை உணவுக்கு முன் 80 mg/dl மற்றும் 130 mg/dl க்கு இடையில் வைத்திருப்பது மற்றும் உணவுக்கு இரண்டு மணி நேரம் கழித்து 180 mg/dl க்கும் குறைவாக வைத்திருப்பது நீரிழிவு நியூரோபதி நோய்நிலை வளர்ச்சியைக் குறைக்க பரிந்துரைக்கப்படும் இரத்த குளுக்கோஸ் அளவுகள் ஆகும்.

சிகிச்சையின் இணையான இலக்குகளாக வலியை நிர்வகித்தல் மற்றும் அதனால் ஏற்படும் சிக்கல்களை திறம்பட நிர்வகித்தல் ஆகிய இரண்டு விஷயங்களை கூறலாம். நரம்புகளை அமைதிப்படுத்தக்கூடிய மருந்துகளால் வலி நிர்வகிக்கப்படுகிறது. உறுப்புகள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளன என்ற விஷயத்தை ஆராய்ந்து அதற்கே ஏற்ப உறுப்புகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கள் நிர்வகிக்கப்படுகின்றன. எனவே செரிமான பிரச்சனைகள், சிறுநீர் பாதை பிரச்சனைகள், பாலியல் செயலிழப்பு போன்ற பிரச்சனைகளுக்கு அதற்கென தனியான குறிப்பிட்ட சிகிச்சையை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகின்றன. 

பொதுவாகச் சொல்லவேண்டும் என்றால், நீரிழிவு நோயை திறம்பட நிர்வகித்து, அது நீரிழிவு நியூரோபதி நோய்நிலையை உண்டாக்கும் நிலைக்கு இட்டுச் செல்லாமல் இருக்க வேண்டும். பதிவில் முன்பே கூறியது போல், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த சிறந்த வழி வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதேயாகும். நோயாளிக்கு நீரிழிவு நோய் இருக்கும்போது என்ன உணவாக உட்கொள்ளப்படுகிறது என்பது மிகவும் முக்கியமானது. பொதுவாக வெள்ளை ரொட்டி, பேஸ்ட்ரி பொருட்கள், இனிப்புகள், கேக்குகள் போன்ற எளிய கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள், ஜங்க் உணவுகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். சிறுதானியங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளின் வடிவத்தில் கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வதை ஊக்குவிக்க வேண்டும். இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்த முடியாதவர்கள், மருந்து எடுத்துக் கொண்டாலும், LCHF உணவு அல்லது வளர்சிதை மாற்ற அறுவை சிகிச்சை (Metabolic surgery) போன்ற பிற விருப்பங்களை முயற்சி செய்யலாம்.



Call Now