18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

எண்டோஸ்கோபி பற்றி மேலும் அறிவோம்

எண்டோஸ்கோபி (மேல் ஜி.ஐ எண்டோஸ்கோப்பி என்று மருத்துவ வட்டாரங்களில் கூறப்படுகிறது) என்பது மேல் செரிமான அமைப்புக்கு, நுனியில் ஒரு சிறிய கேமராவைப் பொருத்திய ஒரு நீண்ட, நெகிழ்வான குழாயினை செலுத்தும் ஒரு நோயறிதல் (diagnostic) செயல்முறையாகும். ஒரு அனுபவமிக்க காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் ஒரு எண்டோஸ்கோபியைப் பயன்படுத்தி சில சமயங்களில் செரிமான அமைப்பை பாதிக்கும் சில நிலைகளுக்கு சிகிச்சையளிக்கவும் இந்த அமைப்பை பயன்படுத்துகிறார். மேல் எண்டோஸ்கோபி வாய், உணவுக்குழாய், வயிறு மற்றும் சிறுகுடல் (சிறுகுடலின் ஆரம்ப பகுதி) போன்ற உள் பகுதிகளை ஆராய உதவுகிறது. இந்த காலக்கட்டத்தில் தயாரிக்கப்படுகின்ற மிகவும் மேம்பட்ட எண்டோஸ்கோப்புகள், ஹை-டெபினிஷன் வீடியோவில் தெளிவான படங்களை வழங்கி துல்லியமான நோயறிதலுக்கு உதவுகின்றன.

எண்டோஸ்கோபி ஏன் செய்யப்படுகிறது?

ஒரு நோயாளிக்கு அவர் சொல்லும் நோய் அறிகுறிகளை மேலும் விசாரிக்கவும், துல்லியமான நோயறிதலுக்கும்  எண்டோஸ்கோபி செயல்முறை உத்தரவாதம் அளிக்கிறது. இந்த காரணங்களுக்காக இரைப்பை குடல் நிபுணர் எண்டோஸ்கோபி செயல்முறையை பரிந்துரைக்கிறார். சில நேரங்களில், இது சில சிகிச்சைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

அறிகுறிகள் மற்றும் நோயறிதலை ஆராய்வதற்கான எண்டோஸ்கோபி

குமட்டல், வாந்தி, வயிற்று வலி, விழுங்குவதில் சிரமம் மற்றும் இரைப்பை குடல் இரத்தப்போக்கு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் காரணிகளைத் தீர்மானிக்க இரைப்பை குடல் நிபுணருக்கு எண்டோஸ்கோபி உதவுகிறது. இரத்த சோகை, இரத்தப்போக்கு, வீக்கம், வயிற்றுப் புண், வயிற்றுப்போக்கு அல்லது செரிமான அமைப்பில் புற்றுநோய் போன்ற நோய்கள் மற்றும் நிலைமைகளைச் சோதிக்க திசு மாதிரிகளை (பயாப்ஸி) சேகரிக்க மருத்துவர் எண்டோஸ்கோபியைப் பயன்படுத்தலாம்.

குறுகிய பட்டை இமேஜிங் (narrow band imaging) என்று அழைக்கப்படும் தொழில்நுட்பங்களைக் கொண்ட எண்டோஸ்கோப் கருவிகள் உள்ளன. அவை சிறப்பு ஒளியைப் பயன்படுத்தி, பாரெட்டின் உணவுக்குழாய் போன்ற நிலைமைகளை முன்கூட்டியே கண்டறிய உதவுகின்றன. மேலும் டியோடினம் வரை செரிமானப் பகுதியில் உள்ள மற்ற வகை புற்றுநோய்களைக் கண்டறியவும் இவை உதவுகின்றன.

சிகிச்சை நோக்கங்களுக்காக எண்டோஸ்கோபி

உங்கள் இரைப்பை குடல் நிபுணர் குறிப்பிட்ட இரைப்பை குடல் பிரச்சனைக்கு சிகிச்சையளிக்க எண்டோஸ்கோப் மூலம் சிறப்பு கருவிகளை அனுப்பலாம். ஒருவர் இரத்த வாந்தியெடுக்கும் போது, உட்புற இரத்தப்போக்கை கட்டுப்படுத்த, எண்டோஸ்கோபி மூலம் இரத்தப்போக்கு ஏற்படும் இரத்தக் குழாயை கிளிப் செய்வதன் மூலம் இரத்தப்போக்கு நிறுத்த பயன்படுகிறது. சில சமயங்களில் உணவுக்குழாய் சுருங்கியிருக்கும், இது ஸ்டென்ட் வைப்பதன் மூலம் விரிவடையச்செய்ய உதவுகிறது. பாலிப்களை அகற்றுதல் (பாலிபெக்டோமி), குடலுக்குள் சென்றுவிட்ட ஒரு பொருளை நீக்குதல், போன்றவை பிற சிகிச்சை நோக்கங்களுக்காக எண்டோஸ்கோபி எவ்வாறு பயன்டுத்தப்படுகிறது என்பதையும் அறியலாம்.

எண்டோஸ்கோபிக்கு எப்படி தயார் படுத்திக்கொள்வது?

உங்கள் இரைப்பை குடல் நிபுணர், எண்டோஸ்கோபிக்குத் தயாராவதற்கு குறிப்பிட்ட வழிமுறைகளை உங்களுக்கு வழங்குவார். சில தயார்நிலைகளாக பின்வருபவை இருக்கலாம்.

எண்டோஸ்கோபி செயல்முறைக்கு முன் உண்ணாவிரதம்

உங்கள் வயிறு காலியாக இருப்பதை உறுதி செய்ய உங்கள் எண்டோஸ்கோபி செயல்முறைக்கு 4-8 மணி நேரத்திற்கு முன்பு நீங்கள் எதையாவது குடிப்பதையும் சாப்பிடுவதையும் நிறுத்த வேண்டும். இந்த உண்ணாநிலை உங்கள் வயிற்றுக்குள் என்ன இருக்கிறது என்பதை தெளிவாகப் பார்க்க பெரிதும் உதவுகிறது ஒரு வேளை நீங்கள் உணவு உட்கொண்ட பிறகு எண்டோஸ்கோபிக்கு போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது ஒரு வேளை உங்களுக்கு வாந்தி ஏற்பட்டால், வயிற்றில் உள்ள உணவு நுரையீரலுக்குள் போய்விடலாம். இதை தவிர்ப்பதற்காகவே இந்த உண்ணாநிலை உதவுகிறது.

எண்டோஸ்கோபி செயல்முறைக்கு முன் சில மருந்துகளை நிறுத்துதல்

உங்களுக்கு நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் அல்லது இதய நோய்கள் போன்ற நிலைமைகள் இருந்தால், உங்கள் இரைப்பை குடல் நிபுணர் எண்டோஸ்கோபி செய்யும் போது, எந்த மருந்துகளை நிறுத்த வேண்டும், எந்த மருந்துகள் தொடர வேண்டும் என்பது குறித்த குறிப்பிட்ட வழிமுறைகளை உங்களுக்கு வழங்குவார். நீரிழிவு மருந்துகள் செயல்முறைக்கு முன் உண்ணாவிரதம் இருப்பதால் குறைந்த சர்க்கரையை ஏற்படுத்தும், எனவே இரைப்பை குடல் நிபுணர் நீரிழிவு மருந்தை எப்போது, எப்படி எடுக்க வேண்டும் என்று குறிப்பாக அறிவுறுத்துவார். இது ஒருவருக்கு ஒருவர் வேறுபடும். ஆனால் காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் சரியான முடிவை எடுக்க, நீங்கள் தவறாமல் எடுத்துக்கொள்ளும் அனைத்து மருந்துகள், சப்ளிமெண்ட்ஸ் ஆகியவற்றை பற்றி மருத்துவரிடம் சொல்ல வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.

எண்டோஸ்கோபி நடைமுறையின் போது என்ன நடக்கிறது?

  • எண்டோஸ்கோபி நடைமுறையின் போது, உங்கள் இடது பக்க வாட்டில் ஒரு மேஜையில் படுத்துக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுவீர்கள்.
  • உங்கள் சுவாசம், இரத்த அழுத்தம், இதய துடிப்பு ஆகியவற்றை கண்காணிக்கும் மானிட்டர்கள் உங்கள் உடலில் இணைக்கப்படும். சில நோய்நிலை உள்ளவர்களுக்கும், குழந்தைகளுக்கும் மட்டுமே மயக்க மருந்துகள் செலுத்தப்படலாம். முன்கையில் உள்ள நரம்பு வழியாக செலுத்தப்பட்ட இந்த மருந்து, எண்டோஸ்கோபியின் போது இயல்பாக ஓய்வுநிலையில் இருக்க உதவுகிறது.
  • உங்கள் வாயில் ஒரு வெளிப்புற மயக்க மருந்து ஸ்ப்ரே பயன்படுத்தப்படலாம். இந்த ஸ்ப்ரே உங்கள் தொண்டையை மறுத்துப்போகச் செய்யும். இதனால் நீண்ட, நெகிழ்வான குழாய் தொண்டைக்குள் செருகப்படும்போது நீங்கள் எந்த உணர்வையும் உணர மாட்டீர்கள். எண்டோஸ்கோபி செய்யப்படும்போது வாயை திறந்த நிலையில் வைத்திருக்க உதவும் பிளாஸ்டிக் கார்டு உங்களுக்கு வழங்கப்படுகிறது.
  • உங்கள் வாயில் எண்டோஸ்கோப் செருகப்படும்போது, உங்கள் தொண்டையில் அது கடந்து செல்லும்போது நீங்கள் அதை விழுங்க வேண்டும். ஒரு வித்தியாசமான உணர்வை நீங்கள் உணர்வீர்கள். ஆனால் நிச்சயமாக எந்த வலியையும் நீங்கள் உணர மாட்டீர்கள். எண்டோஸ்கோபி உங்கள் சுவாசத்தில் ஒருக்காலும் தலையிடாது.
  • உங்கள் இரைப்பைக் குழாயில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்ட் மானிட்டரைப் பார்க்கிறார். பட பதிவுகள் தொடர்ச்சியாக பெறப்படுகின்றன. சில நேரங்களில், திசு மாதிரியை (பயாப்ஸி) சேகரிக்க சிறப்பு அறுவை சிகிச்சை கருவிகள் எண்டோஸ்கோப் வழியாக அனுப்பப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில், இத்தகைய சிறப்பு அறுவை சிகிச்சை கருவிகள் ஒரு பாலிப்பை அகற்ற அல்லது உணவுக்குழாயை விரிவாக்க அல்லது வேறு எந்த சிகிச்சை முறைகளையும் செய்ய உதவியாக இருக்கின்றன.

எண்டோஸ்கோபி செயல்முறைக்குப் பிறகு என்ன நடக்கிறது?

மயக்க மருந்து செயல் இழந்து போகத் தொடங்கும் போது உங்களை கண்காணித்துக்கொள்ள எண்டோஸ்கோபி மையத்தில் தங்க வேண்டியிருக்கலாம். உங்கள் மருத்துவர் நீங்கள் நலமாக இருப்பதாக உணர்ந்தவுடன் வீட்டிற்குச் செல்லும்படி அறிவுறுத்துவார். சில நேரங்களில், வீக்கம் மற்றும் வாயு, தசைப்பிடிப்பு, தொண்டை புண் போன்ற லேசான சங்கடமான அறிகுறிகளை நீங்கள் அனுபவிக்கலாம். இது இயல்பானவை தான்.

எண்டோஸ்கோபியைப் பெற்ற பிறகு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதா?

பெரும்பாலான எண்டோஸ்கோபிகள் அனுபவம் வாய்ந்த காஸ்ட்ரோஎன்டாலஜிஸ்டுகளால் செய்யப்படுகின்றன. எனவே எண்டோஸ்கோபியைப் பெற்ற பிறகு ஏதேனும் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவே. உங்களுக்கு காய்ச்சல், இரத்தத்துடனோ அல்லது இல்லாமலோ ஏற்படும் வாந்தி, மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, விழுங்குவதில் சிரமம், இரத்தத்துடனோ, கருப்பு அல்லது மிகவும் அடர் நிறமாகவோ மலம் கழிப்பது, மேல் எண்டோஸ்கோபி எடுத்த பிறகு கடுமையான வயிற்று வலி போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக உங்கள் மருத்துவரை அழைக்கவும். எண்டோஸ்கோபி செயல்முறைக்குப் பிறகு, நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்கப்படாவிட்டால், அவர்களின் இயல்பான நடவடிக்கைகளையோ மருந்துகளையோ மீண்டும் தொடங்கலாம்.

எண்டோஸ்கோபி என்பது உயிர்காக்கும் தரமான ஒரு நடைமுறை ஆகும். எண்டோஸ்கோபி நடைமுறைகளால் ஏற்படும் சொற்ப தீமை வாய்ப்புகளை விடவும் நன்மைகள் மிக மிக அதிகம் என்ற உண்மையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Call Now