18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

அறுவைசிகிச்சை விளைவும், அதில் ஊட்டச்சத்தின் பங்கும்

ஊட்டச்சத்து குறைபாடு இந்தியாவில் பொதுவானது தான். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள ஒருவர் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் போது நிலைமையின் தீவிரத்தன்மையை பொறுத்து குணமாவது தாமதப்படலாம். சில சமயங்களில் அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் சிக்கல்களை கூட அது உருவாக்குவதற்கு பங்காற்றலாம். எந்தவொரு அறுவை சிகிச்சை முறைகளுக்கும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட (Elective) அறுவை சிகிச்சைகளில், நோயாளியின் ஊட்டச்சத்து நிலை மட்டுமே அறுவை சிகிச்சை செய்யப்படுவதற்கு தகுதியானவரா என்று தீர்மானிக்கிறது. அவர்களின் உடலின் ஊட்டச்சத்து நிலை முதலில் சமன்படுத்தப்பட்டு, அதன்பிறகுதான் அவர்கள் அறுவை சிகிச்சை முறைகளுக்கு உட்படுத்த பரிந்துரைக்கப்படுகிறார்கள். அறுவைசிகிச்சை விளைவுகளில் ஊட்டச்சத்து குறைபாட்டின் பங்களிப்பு அல்லது தாக்கங்கள் என்னென்ன?

ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உணவு பற்றாக்குறை நோய்க்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன?

உணவே கிடைக்காதது, ஏழ்மையான சமூக-பொருளாதார நிலைமைகள், சில நோய்களால் ஊட்டச்சத்து உறிஞ்சுதலில் உள்ள குறை போன்ற காரணங்களால் ஒருவர் ஊட்டச்சத்தை கடுமையாக இழக்கும்போது, அது ஊட்டச்சத்து குறைபாடு என்று அழைக்கப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஊட்டச்சத்து குறைபாடு என்பது கலோரி நுகர்வு குறைவாகவும், புரத நுகர்வு குறைவாகவும் இருக்கும் ஒரு நிலை ஆகும்.

அதற்கு ஆரோக்கியம் குறைபாட்டின் காரணமாக குறைந்த அளவிலே உணவை எடுத்துக் கொள்வது, ஊட்டச்சத்து உறிஞ்சுதலில் ஏற்படும் சுணக்கம், மது அருந்துவது ஆகியவை போதிய ஊட்டச்சத்தை உடலால் உறிஞ்ச முடியாமல் போகும் போக்கிற்கு வழிவகுக்கும்.

இந்த இரண்டு காரணங்களாலும் இயக்க சக்தி, புரதம் அல்லது குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்களின் குறைபாடு உடலில் ஏற்படுகிறது. இந்த குறைபாடு உடல் செயல்பாட்டில் மாற்றங்களை உருவாக்குகிறது, இந்த மாற்றங்களை ஊட்டச்சத்து ஆதரவால் அதிர்ஷ்டவசமாக மாற்றி அமைக்கலாம்.

ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் அறுவைசிகிச்சை விளைவுகள்

ஒரு நோயாளிக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருக்கிறது என்று அவர்களது உடலை வைத்தே பெரும்பாலான அறுவை சிகிச்சை நிபுணர்களால் அவதானிக்க முடிகிறது. எனவே இதுபோன்ற நோயாளிகள் அறுவைசிகிச்சைக்கு முன்னர் போதுமான அளவு ஊட்டத்தை எடுத்துக் கொண்ட பிறகே அறுவை சிகிச்சைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள். உடனடி விளைவுகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

– ஒரு அறுவை சிகிச்சைக்குப் பிறகான மயக்க மருந்தில் இருந்து நோயாளியை மீட்பது ஒரு சவாலாக அமையும். எனவே ஒரு நபர் ஊட்டச்சத்து குறைபாட்டால் வத்தலும் தொத்தலுமாக இருக்கும்போது மயக்க மருந்தினால்  ஆபத்து ஏற்பட வலுவான வாய்ப்பு உள்ளது.

– அறுவை சிகிச்சையின் போது அதிக இரத்த இழப்பு ஏற்படலாம்.

– நுரையீரல் தொற்றுக்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன.

– எந்த அறுவை சிகிச்சையும் ஒரு திட்டமிடப்பட்ட காயம் ஏற்படுத்துதல் (trauma) என்ற வகையிலேயே வரும். அறுவை சிகிச்சையில் கீறப்பட்ட திசுக்கள் ஒன்று சேர புரதம் தேவைப்படுகிறது. புரதம் நம் உடல் அமைப்பின்  கட்டுமான செங்கல் எனலாம். அது காயங்கள் ஆறுவதற்கு தேவையான ஒரு அடிப்படை ஆகும். எனவே ஒரு உடல் புரதத்தை இழக்கும்போது, அறுவை சிகிச்சைக்குப் பிறகு ரணங்களை குணப்படுத்துவது என்பது ஒரு சவாலாக மாறும்.

– அறுவை சிகிச்சைக்குப்பின் புண் ஆறுவதற்கு மிக முக்கியமான தாதுச்சத்து இரும்புச்சத்து ஆகும். ஆகவே ஒரு நோயாளிக்கு இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் இரத்த சோகை இருந்தால், அவருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்னர் அதற்கு முதலில் சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

– துத்தநாகம் (Zinc) என்ற கனிமமும் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு உடல் அத்தகைய அத்தியாவசிய தாதுக்கள், வைட்டமின்கள், புரதம் போன்ற கட்டுமானத் தொகுதிகளை இழந்தால், அறுவை சிகிச்சைக்குப் பின் குணப்படுத்துவது என்பதே ஒரு சவாலாக மாறும்.

மேலும் அறுவைசிகிச்சை பகுதியில் ஏற்பட வாய்ப்புள்ள சில நீண்டகால பிரச்சினைகளாக நோய்த்தொற்று, கீறல் குடலிறக்கம் போன்றவற்றை கூறலாம்.

உடலுக்கு குறைந்த ஊட்டம் கிடைப்பதால் ஏற்படும் பொதுவான விளைவுகள்

– உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது.

– மன அழுத்த எதிர்ப்பை பலவீனப்படுத்துகிறது. அதாவது ஒரு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டால், ஒரு அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படக்கூடிய வலி, தொற்று போன்றவற்றால் ஏற்படும் மன அழுத்தத்தை எதிர்த்து உடலால் திறம்பட போராட முடியாது.

– அறுவைசிகிச்சையால் ஏற்படும் மன அழுத்தத்தின் அதிகரிப்பால் நியூரோஹார்மோனல் மாற்றங்கள், வளர்சிதை மாற்றங்கள், நோயெதிர்ப்பு செயல்முறையில் மாற்றங்கள் போன்ற சில தேவை இல்லாத மாற்றங்கள் ஏற்பட வழிவகுக்கும். இது அதிக வீக்கத்திற்கு வழிவகுக்கும். அதோடு மட்டுமில்லாமல் காயம் குணமடைவதையும் பாதித்துவிடுகிறது.

– காயம் குணப்படுத்தும் காலத்தின் அதிகரிப்பு இருப்பதால், மருத்துவமனையில் தங்கும் காலமும் இதன் விளைவாக அதிகரிக்கிறது.

– தசை விரயத்தை அதிகரிக்கிறது.

– அறுவைசிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் சிக்கல்களின் வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய ஊட்டச்சத்து உட்கொள்ளலை கட்டுப்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்

எந்தவொரு அறுவை சிகிச்சை செய்தபிறகும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஊட்டச்சத்து எடுத்துக் கொள்வதை கட்டுப்படுத்த மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். சிக்கலான அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்ட பிறகு  ஊட்டச்சத்தை கட்டுப்படுத்தும் காலம் அதிகம். பொதுவாக, குடலிறக்க அறுவை சிகிச்சைகள், மூலம், போன்ற சிக்கல் அல்லாத லேபராஸ்கோபிக் அறுவை சிகிச்சைகளுக்கு ஊட்டச்சத்து காலத்தின் கட்டுப்பாடு மிகக் குறைவு. லேபராஸ்கோபிக் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சைகள் மற்றும் பிற எடை இழப்பு அறுவை சிகிச்சைகளுக்கு, ஊட்டச்சத்து காலத்தின் கட்டுப்பாடு சற்றே அதிகமாக இருக்கும். செய்யப்படும் அறுவை சிகிச்சை திறந்த நிலை (open surgery) அல்லது  சிக்கலானதாக இருக்குமேயானால், ஊட்டச்சத்து காலத்தின் கட்டுப்பாடு மிக அதிகமாக இருக்கும். எனவே இத்தகைய நிலைமைகளில் உள்ள நோயாளியின் உடல்கள் ஊட்டச்சத்து வழங்கப்படாமல் இருக்கும் கால அளவை சமாளிக்க தாங்கும் திறமையுடன் இருக்க வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உணவு பற்றாக்குறை நோய் உள்ளவர்களுக்கு உடல் ஏற்கனவே போதுமான ஊட்டச்சத்து இல்லாமல் ஒரு வித அழுத்த நிலையில் இருக்கும். அந்த நிலையில் அவர்கள் ஏதேனும் அறுவை சிகிச்சைக்கு உட்பட்டு, அவர்களின் உடலை அதிக மன அழுத்தத்திற்கு உட்படுத்தினால் அதன் விளைவு மோசமாக இருக்கலாம்.

ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு முந்தைய ஊட்டச்சத்து வழங்கல்

ஊட்டச்சத்து குறைபாடு உள்ள பெரும்பாலான மக்கள் அறுவை சிகிச்சைக்குப் பிறகு வாய்வழி ஊட்டச்சத்தை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுவார்கள். அதுவே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் போதுமானதாக இருக்கும். இம்மாதிரியான அறுவை சிகிச்சைக்கு முன்னான ஊட்டச்சத்து தலையீடு சில சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை நிபுணரால் பரிந்துரைக்கப் படாமல் போகலாம். ஆனால் நோயாளிக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு இருக்கும் பட்சத்தில், குறைந்தது 7 நாட்களுக்கு ஒரு அறுவை சிகிச்சைக்கு முன்னான ஊட்டச்சத்து தலையீடு பரிந்துரைக்கப்படுகிறது. அத்தகைய நோயாளிகளுக்கு வாய்வழி ஊட்டச்சத்து சாத்தியமில்லை என்றால், இரத்தக்குழாயின் வழியாக (intravenal) ஊட்டச்சத்தை ஏற்ற பரிந்துரைக்கப்படுகிறது. சில நேரங்களில் ஆரோக்கியமான தோற்றமுள்ள நோயாளிகளுக்கு கூட, இந்த மாதிரியான ஊட்டச்சத்து உடலுக்கு ஏற்றும் வழி பரிந்துரைக்கப்படலாம். பொதுவாக, குறைந்தபட்ச ஊட்டச்சத்து மறுக்கப்படாத ஒரு உடல் அறுவை சிகிச்சை விளைவுகளைச் சமாளித்து மீண்டு எழும் சக்தி கொண்டதே ஆகும். ஒரு அறுவை சிகிச்சையின் என்ன விளைவுகளை ஏற்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்யும் காரணியாக ஊட்டச்சத்தே முதன்மை பங்கை வகிக்கிறது.

Call Now