18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

கர்ப்ப காலத்தில் இரத்த சோகை ஏன் பொதுவாக ஏற்படுகிறது?

கர்ப்பிணிப் பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாட்டினால் இரத்த சோகை ஏற்படும் அபாயம் அதிகம். இரும்புச்சத்து குறைபாட்டு இரத்த சோகை என்பது ஆரோக்கியமான இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை இருப்பதால் உடல் திசுக்களுக்கு போதுமான ஆக்ஸிஜன் கொண்டு செல்லப்படாத ஒரு நிலை என்பதை நாம் அறிவோம். கர்ப்ப காலத்தில் இரத்த சோகை ஏன் அதிகமாக ஏற்படுகிறது? அதற்கான காரணங்கள், அதைத் தடுப்பது எப்படி, அது ஏற்பட்டால் சிகிச்சையளிப்பது எப்படி என்று விவாதிப்போம்.

கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகைக்கான காரணங்கள்

கர்ப்ப காலத்தில், உங்கள் உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது. தேவையான இரும்பின் அளவிலும் அது தொடர்பில் அதிகரிக்கிறது. கர்ப்பிணிப் பெண்ணின் உடல் இரும்பு சத்தை பயன்படுத்தி கருப்பையில் உள்ள குழந்தைக்கு ஆக்ஸிஜனை வழங்க அதிக இரத்தத்தை உருவாக்குகிறது. கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் இரும்புச் சத்து குறைவாக இருந்தாலோ அல்லது கர்ப்ப காலத்தில் பெண்ணின் உணவில் போதுமான இரும்புச் சத்து (ஊட்டச்சத்து) கிடைக்காமல் போனாலோ, கர்ப்ப காலத்தில் அந்த பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை ஏற்படுகிறது.

கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை இருந்தால் குழந்தைக்கு ஏற்படும் விளைவுகள்

கர்ப்ப காலத்தில் மிகவும் கடுமையான இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை குறைப்பிரசவத்துக்கு வழிவகுக்கும் (ஒரு குழந்தை 37 வாரங்களுக்கு முன்பு பிறந்தால், அது குறைப்பிரசவம் என்று அழைக்கப்படுகிறது). குறைந்த எடை கொண்ட குழந்தைகள் கூட பிறக்கலாம். பிரசவத்திற்குப் பிறகு கர்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு (postpartum depression) ஏற்பட இது ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு என்பது உடல், உணர்ச்சி மற்றும் நடத்தை ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களின் ஒரு கலவையாகும். பிரசவத்திற்குப் பிறகு ஒரு சில பெண்களுக்கு  இது ஏற்படலாம். சில சந்தர்ப்பங்களில், கர்ப்ப காலத்தில் இரத்த சோகை காரணமாக குழந்தை இறப்பும் நிகழ்ந்துள்ளது.

கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகைக்கான ஆபத்து காரணிகள்

கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை ஏற்படுவதற்கான ஆபத்து காரணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

(1) குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே மறுபடியும் கருவுறுதல்

(2) வயிற்றில் இரட்டை அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருப்பது

(3) கர்ப்ப காலத்தில் அடிக்கடி வாந்தி எடுத்தல்

(4) இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பது

(5) கர்ப்பத்திற்கு முன்பே இரத்த சோகை இருப்பது அல்லது இரத்த சோகை இருப்பதற்கான குடும்ப வரலாறு.

கர்ப்பிணிப் பெண்ணுக்கு இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை இருந்தால் கவனிக்க வேண்டிய அறிகுறிகள் என்னென்ன?

கர்ப்பிணிப் பெண்ணுக்கு இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை இருந்தால் கவனமாக கவனிக்க வேண்டிய சில அறிகுறிகளாக பொதுவான சோர்வு மற்றும் பலவீனம், தலைச்சுற்றல், வெளிர் அல்லது மஞ்சள் நிற தோல், தலைவலி போன்றவைகளை சொல்லலாம். விரைவான இதயத் துடிப்பு, குறைந்த இரத்த அழுத்தம், கவனம் செலுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்வது போன்ற சில அறிகுறிகள் இரத்த சோகையின் தீவிரத்தன்மையை குறிக்கலாம். மேலும் இவை இருந்தால் அவசரமாக சிகிச்சையளிக்கப்பட வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். ஒருவருக்கு இரத்த சோகை இல்லாவிட்டாலும், கர்ப்ப காலத்தில் சில அறிகுறிகள் பொதுவானவை என்பதால், கர்ப்ப காலத்தில் இரத்த சோகையை பரிசோதிக்கும் இரத்த பரிசோதனையை எப்போதும் செய்துக்கொள்வது நல்லது.

கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகையைத் தடுப்பது

(1) மகப்பேறுக்கு முந்தைய காலத்தில் வைட்டமின்கள் அல்லது இரும்புச்சத்து கொண்ட சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்வது. கர்ப்ப காலத்தில், ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஒரு நாளைக்கு 27 மில்லிகிராம் இரும்புச்சத்து தேவைப்படலாம்.

(2) பீட்ரூட், சிவப்பு இறைச்சி, கோழி, மீன், பச்சை காய்கறிகள், ஆப்பிள்கள் போன்ற இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது.

(3) ஆரஞ்சு, எலுமிச்சை சாறு அல்லது ஏதேனும் வைட்டமின்-சி நிறைந்த உணவுகளை போதுமான அளவு எடுத்துக்கொள்வது. வைட்டமின்-சி தாவர உணவுகளில் இருந்து கிடைக்கும் இரும்புச்சத்தை உறிஞ்ச உதவும் என்பதே இதற்குக் காரணம்.

கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறைபாட்டுக்கான இரத்த சோகை சிகிச்சை

மகப்பேறுக்கு முந்தைய வைட்டமின்களை எடுத்துக் கொண்டாலும் சிலருக்கு இரத்த சோகை ஏற்படலாம். அதனால் தான் மற்ற காரணங்களால் இரத்த சோகை ஏற்பட்டதா என்று சோதிக்க பரிந்துரைக்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில், கொடுக்கப்பட்ட இரும்புச் சத்து போதுமானதாக இல்லை அல்லது உடலால் உறிஞ்சப்படாமல் இருக்கலாம். காரணம் இரும்புச்சத்து குறைபாடு என்றால், உங்கள் மருத்துவர் கூடுதல் இரும்புச் சத்துக்களை பரிந்துரைக்கலாம். மறுபுறம், வாய்வழி இரும்புச் சத்துக்களை உடலால் உறிஞ்ச முடியாவிட்டால், நரம்பு வழியாக (இரும்புச்சத்து ஊசிகள்) இரும்புச்சத்து செலுத்தப்படும்.

Call Now