18, 6th Cross Street
CIT Colony, Mylapore
+ (91) 9952002927
Give us a Call
springfieldinfo@gmail.com
Send us a Message
Mon-Sat : 9am-6pm
Working Hours

கைவைத்தியம் அல்லது யோகா ஹெர்னியாவை குணப்படுத்துமா?

எந்தவொரு கைவைத்தியமும் யோகாவும் குடலிறக்கத்தை குணப்படுத்த முடியுமா? குடலிறக்கத்திற்கு கைவைத்தியம் எதுவும் இல்லை என்பதற்கு தெளிவான சான்றுகள் உள்ளன. யோகாவும் கூட குடலிறக்கத்தை குணப்படுத்தாது. ஆனால் சிலர் ஹெர்னியாவை யோகா அல்லது சில கைவைத்தியம் மூலம் குணப்படுத்தியதாக எப்படி கூறுகிறார்கள்? வாருங்கள் அலசுவோம். ஆனால் உங்களுக்கு குடலிறக்கம் இருந்தால் நீங்கள் தவிர்க்க வேண்டிய செயல்பாடுகளை முதலில் பார்ப்போம்.

1) ஒரு வாளி தண்ணீர், எல்பிஜி சிலிண்டர்கள், ஜிம்மில் உள்ள எடைகள், குழந்தைகளைத் தூக்குவது போன்ற எடையைத் தூக்குவதை தவிர்க்கவும். அடிவயிற்றின் அழுத்தம் இதனால் அதிகரிக்கிறது. அதுமட்டுமில்லாமல் இது குடலிறக்கத்தில் சில எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். சில நேரங்களில் இது சிக்கல்களுக்கும் வழிவகுக்கிறது.

2) மலச்சிக்கலைத் தவிர்க்கவும். ஏனென்றால் மலச்சிக்கல் ஏற்பட்டால், நீங்கள் மலம்கழிக்கும்போது உங்களை முக்கத் தூண்டுகிறது. இதனால் உங்கள் குடலிறக்கம் மோசமடையக்கூடும்.

3) இருமல், மூச்சுத்திணறல், ஆஸ்துமா, புரோஸ்டேட் பிரச்சினைகள், ஃபிமோசிஸ், புகை பிடித்தல் போன்றவை இருந்தால் சிறுநீர் கழிக்கும்போது அடிவயிற்றில் அழுத்தம் கொடுக்கக்கூடும். இதுவும் குடலிறக்கத்தை பலவீனப்படுத்தும்.

4) மிக முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டிய அடுத்த காரணி உங்கள் எடை ஆகும். குடலிறக்கம் உள்ளவர்கள் தங்கள் எடையைக் கவனித்து உடல் பருமனைக் கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில் அதிகரித்த கொழுப்பு (உடல் எடை) குடலிறக்கத்தை மோசமாக்குவது மட்டுமல்லாமல் குடலிறக்க அறுவை சிகிச்சையின்போது இடையூறும் செய்யலாம்.

யோகா ஹெர்னியாவை குணப்படுத்த முடியும் என்று சிலர் கூறுகின்றனர். இதில் உண்மை உள்ளதா?

அறுவைசிகிச்சை இல்லாமல் யோகாவால் குடலிறக்க நிலையை குணப்படுத்த முடியும் என்ற தவறான கருத்து உள்ளது. இந்த கூற்றில் எந்த உண்மையும் இல்லை. குடலிறக்கம் என்பது திசுவில் ஏற்பட்ட ஓட்டை ஆகும். எனவே எந்த யோகாசனாவினாலும் திசுவை வளர்த்து ஓட்டையை அடைகாக்க முடியாது. உண்மையில், உடலை முறுக்குவதன் மூலமும், வளைப்பதன் மூலமும் செய்யப்படும் சில யோகாசனங்கள் சில சமயங்களில் குடலிறக்கத்தில் சிக்கல்களை ஏற்படுத்த வழிவகுக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

யோகா அல்லது வேறு வகையான உடற்பயிற்சிகளைச் செய்தபின் அவர்களின் குடலிறக்கம் மறைந்துவிட்டதாக சிலர் எங்களிடம் கூறுவார்கள். வயிற்றுச் சுவரில் குறைபாடு ஏற்பட்டு, அது கிழிந்து, குடல், கொழுப்பு அல்லது வேறு உறுப்புகளோ அதன் வெளியே துருத்தும் நிலையே ஹெர்னியா என்பதை நாம் நினைவு கொள்ளவேண்டும். யோகா செய்தபின் தங்கள் குடலிறக்கம் மறைந்துவிட்டது என்று சிலர் கூறுவதற்கு இரண்டு காரணங்கள் மட்டுமே இருக்க முடியும்.

முதல் காரணம் என்னவென்றால், அவர்களுக்கு முதலில் குடலிறக்கமே இருந்திருக்காது. இடுப்பு பகுதிக்கு அருகில் நிணநீர் அல்லது லைபோமா (கொழுப்பு கட்டி) ஆகியவற்றில் வீக்கங்கள் இருந்திருக்கலாம். இதனை குடலிறக்கம் என்று தவறாக நினைத்து இருக்கலாம். இதில் தொற்று குறையும் போது, ​​வீக்கம் தானாகவே தீர்க்கப்படக்கூடும். விரைப்பைக்கு செல்லும் நரம்பு மற்றும் இரத்த வழங்கலில் சில நேரங்களில் திரவக் குவிப்புக்கு ஆளாகும். அது வீக்கத்தை ஏற்படுத்தும். இதனை கூட குடலிறக்கம் என்று தவறாக சிலர் நினைப்பதுண்டு.

இரண்டாவது காரணம், ஹெர்னியாவின் உள்ளடக்கங்கள் (குடல், கொழுப்பு போன்றவை) விலகிக் உள்ளே செல்லும்போது ஹெர்னியா குணமாகி விட்டது போன்ற தோற்றம் அளிக்கலாம்

இங்கே குடலிறக்கம் இன்னும் உள்ளது என்பதையும், அந்த ஓட்டை இன்னும் உள்ளது என்பதையும் தெளிவாக உணர வேண்டும். இது வாழ்க்கையில் எந்த நேரத்திலும் மீண்டும் ஏற்பட்டு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதையும் அறியுங்கள். எனவே யோகா அல்லது பிற பயிற்சிகளை செய்வதன் மூலம் அவை குணப்படுத்த முடியாது. மேலும் முழுமையான சிகிச்சையாக அவர்களுக்கு அறுவை சிகிச்சை கண்டிப்பாக தேவைப்படும்.

ஹெர்னியாவுக்கு கைவைத்தியம் உள்ளதா?

குடலிறக்கத்திற்கான கைவைத்தியம் எதுவும் இல்லவே இல்லை என்பதே பதில். முன்பு கூறியது போல், அது வயிற்றுச் சுவரில் உள்ள ஒரு ஓட்டை. இந்த ஓட்டையை எந்தவொரு கைவைத்தியத்தாலுமோ, தானாகவோ குணமாக்க முடியாது. எனவே குடலிறக்கம் உள்ள ஒருவர் குடலிறக்க அறுவைசிகிச்சை மூலம் மட்டுமே அதனை சரிசெய்ய முடியும். யூடியூப் வீடியோக்களில் மருத்துவ அறிவோ, பின்னணியோ இல்லாத சில போலிகள் சந்தேகத்துக்கு உரிய மருத்துவக் குறிப்புகளை கூறினால் அவற்றை புறம் தள்ளவேண்டும். உங்கள் குடலிறக்கத்தை அறுவை சிகிச்சை மூலம் சீக்கிரம் சரிசெய்து, உங்கள் உடல்நிலை சரியானது என்று உங்கள் அறுவை சிகிச்சை நிபுணர் சொன்ன பிறகு, யோகா கூட செய்து, உங்கள் சாதாரண வாழ்க்கையை மீண்டும் தொடங்கலாம்.

Call Now