பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை – என்னென்ன வகைகள் உள்ளன?
பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறை என்பது அழகுக்காக நடத்தப்படும் (Plastic / Cosmetic / liposuction Surgery) ஒரு சிகிச்சை முறை இல்லை. உடல் பயிற்சி, டையட் போன்ற வாழ்க்கை முறை மாற்றத்தை கடைபிடித்தும் உடல் எடையை குறைக்க முடியாமல் அதனால் நோய்வயப்பட்டவர்களுக்கு நல்ல தீர்வை தரும் ஒரு அறுவை சிகிச்சை முறையே பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை ஆகும்.
உங்கள் BMI 35 க்கு அதிகமாக இருந்து, அதனால் உடல் நலக் குறைபாடுகள் இருந்தாலோ, அல்லது உங்கள் BMI 40 க்கு அதிகமாக இருந்தாலோ, பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை கொண்டு அதீத உடல் பருமனில் இருந்து விடுதலை பெற்று அதை சார்ந்த நோய்களிலிருந்து தீர்வளிக்கிறது. பெரியாட்ரிக் அறுவை சிகிச்சையில் உள்ள பல வகைகளை இங்கே அலசுவோம்.
பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை வகைகள்
- காஸ்ட்ரிக் பேண்டிங் (Gastric Banding) – இந்த அறுவை சிகிச்சை முறை “லேப் பேண்டு” என்றும் அழைக்கப்படுகிறது. இந்த முறையில் உள்வயிற்றின் மேல் பகுதியில் ஒரு லேப் பேண்டை அணிவிக்கிறார்கள். நவீன மருத்துவ முறையான லேபெரோஸ்கோபி முறையில் சிறிய துளைகளை நம் வயிற்றுப் பகுதியில் இட்டு இந்த லேப் பேண்டை அணிவிக்கிறார்கள். இந்த லேப் பேண்டை உள்ளே அணிவிப்பதால் நம் உள்வயிறு சுருங்கி அதன் கொள்ளளவு குறைந்து விடுகிறது. இதனால் நாம் எடுக்கும் உணவின் அளவு வெகுவாக குறைகிறது. இந்த அறுவை சிகிச்சை முறையை மேற்கொண்டால், இரண்டு ஆண்டுகளில் ஏறக்குறைய உங்கள் எடையில் 45% ஐ குறைக்க முடியும்.
- காஸ்ட்ரிக் ஸ்லீவ் அல்லது ஸ்லீவ் காஸ்ட்ரெக்டமி (Gastric Sleeve or Sleeve Gastrectomy) – நம் உள்வயிற்றின் முக்கால் பங்கை இந்த அறுவை சிகிச்சை முறையில் வெட்டி எடுத்து விடுவதே. நம் உள்வயிறு இயல்பாக வளைந்து இருக்கும். அதன் வளைந்த போக்கிலேயே அறுவை சிகிச்சை செய்து உள்வயிறு நீள வாக்கில் வெட்டி எடுக்கப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை முறையும் நவீன மருத்துவ முறையான லேபெரோஸ்கோபி முறையிலேயே செய்யப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை முறையை மேற்கொண்டால், இரண்டு ஆண்டுகளில் ஏறக்குறைய உங்கள் எடையில் 55-60% வரை குறைக்க முடியும்.
- காஸ்ட்ரிக் பைபாஸ் அல்லது ரூ-அன்-ஒய் காஸ்ட்ரிக் பைபாஸ் (Gastric Bypass or Roux-en-Y Gastric Bypass) – இருக்கின்ற எல்லா பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை முறைகளில் இதுவே மிக சிறப்பானது (Gold Standard) என்று கூறப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை முறையில், உள்வயிற்றுப்பகுதியும், டுயோடினம் என்று சொல்லப்படும் சிறுகுடலின் முதற் பகுதி, இவை இரண்டும் சுத்தமாக பயன்படுத்தப் படாமல், உணவுக்குழாயின் கீழ் பகுதியில் மாற்றுவழி ஏற்படுத்தப்பட்டு, அது நேராக சிறுகுடலின் நடுப்பகுதியோடு இணைக்கப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை முறையும் நவீன மருத்துவ முறையான லேபெரோஸ்கோபி முறையிலேயே செய்யப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை முறையை மேற்கொண்டால், இரண்டு ஆண்டுகளில் ஏறக்குறைய உங்கள் எடையில் 65-80% வரை குறைக்க முடியும்.
- மெடபாலிக் அறுவை சிகிச்சை முறை (Metabolic Surgery) – ஒருவருக்கு மிக அதிகமாக கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை அளவு இருக்குமென்றாலும், அவர் உடல் பருமன் இல்லாமல் இருந்தாலும் இந்த அறுவை சிகிச்சை முறை பரிந்துரைக்கப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை முறையில் சிறுகுடலின் ஒரு பகுதி இன்னொரு பகுதியோடு இணைக்கப்பட்டு ஒரு மாதிரியான மாற்றுப்பாதை அமைக்கப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சையையும் லேபெரோஸ்கோபி முறையில் சிறிய துளைகளை நம் வயிற்றுப் பகுதியில் இட்டே செய்கிறார்கள்.
முடிவு – பெரியாட்ரிக் அறுவை சிகிச்சையில் பல வகைகள் இருந்தும், உங்கள் உடல் எடை, நோய் தன்மை, ஆகியவற்றின் நிலையை கணக்கில் எடுத்துக் கொண்ட பிறகே அறுவை சிகிச்சை மருத்துவர் எந்த வகை உங்களுக்கு ஏற்றது என்பதை பரிந்துரைப்பார்.